“புத்துயிர்க்கும் புதிய நகரம்” உள்ளூராட்சி வாரம் 2026

“புத்துயிர்க்கும் புதிய நகரம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்று வரும் உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஐந்தாம் நாளான இலக்கியம், கல்வி, நூலகம் மற்றும் விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பின்தங்கிய பிரதேசங்களை இலக்காகக் கொண்டு நடமாடும் நூலக சேவையும், கரப்பந்தாட்டப் போட்டிகள் வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சாமர ஜயதிலக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் தாஹிரா வித்தியாலயம் மற்றும் மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு நடமாடும் நூலக சேவை வழங்கப்பட்டது.
அத்துடன், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையில் சினேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், பாடசாலை அதிபர்கள், நூலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.