உள்ளுராட்சி மன்றங்களின் செயலாற்றுகை போட்டியில் சம்மாந்துறை பிரதேச சபை மாவட்டத்தில் முதலிடம்

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாகாண, மாவட்ட ரீதியாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் செயலாற்றுகை போட்டியில் (Perfect 2.0) உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளையும், சேவைகளையும் மதிப்பீடு செய்தலில் சம்மாந்துறை பிரதேச சபை அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகணத்தில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூராட்சி சபைகளை 3 கட்டங்களாக தரம் பிரித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி - முதலாம் தரமான அதி சிறந்த உள்ளுராட்சி மன்றமாக அம்பாறை மாவட்டத்தில் - சம்மாந்துறை பிரதேச சபை முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் இப்போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு விருதுகள் மாத்திரம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை அம்பாரையில் முதல் இடத்தை பெற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு அபிவிருத்திற்காக 30 மில்லியன் வரையான நிதி வழங்கப்படவுள்ளது. அதற்கான மதிப்பீடு அறிக்கையும் கோரியுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பின்னர் இன்று திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து இந்த வெற்றிக்கு சகல உத்தியோகத்தர்களின் அர்பணிப்பான சேவையும், கெளரவ உறுப்பினர்களின் ஒத்திழைப்பையும் பாராட்டியதுடன் எதிர்காலத்தில் மாகாண ரீதியில் முதல் இடத்தை பெற உங்களின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுருத்தினார்.