சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் தலைமையில் சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 09 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 05 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சி சார்பில் 01 உறுப்பினரும், தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பில் 03 உறுப்பினர்களும் என 23 பேர் இன்றைய சபைக்கு சமூகமளித்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் கோரப்பட்டதுடன் இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர். அதன் பின்னர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.
அதன் பிரகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் பெயரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் எஸ்.நளீம் அவர்களின் பெயரும் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டது.
தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் 14 வாக்குகளை பெற்றதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.நளீம் அவர்கள் 07 வாக்குகளை பெற்றதுடன் தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். அதன் அடிப்படையில் 07 மேலதிக வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ச்சியாக கூட்டத்தின் உப தவிசாளர் தெரிவு நடைபெற்றன இதில் 4 நபர்கள் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு முன்மொழியப்பட்டதுடன் ஒருவர் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளாதால் 03 போட்டியாளர்களுக்கிடையில் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் உறுப்பினர் வெள்ளையன் வினோகாந் அவர்கள் 12 வாக்குகளும், சுயேட்சைக்குழு உறுப்பினரான சுலைமாலெப்பை அப்துல் நஸார் அவர்கள் 07 வாக்குகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக உறுப்பினர் ஆனந்தம் சதானந்தம் அவர்களுக்கு 2 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வெள்ளையன் வினோகாந் 05 மேலதிக வாக்குகளை பெற்று உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
இதில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் புலனாய்வு உத்தியோகத்தர் ( விசேட தரம்) என்.ஐங்கரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments